வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?


வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?
x

வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூரில் வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமித்த ஆகாய தாமரை செடிகள்

கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வெண்ணாறு 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்கி நின்றது. கடந்த 15 ஆண்டுகளாக வெண்ணாறு முழுவதும் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து காட்சியளிக்கிறது. கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வாழச்சேரி, பொதக்குடி, லெட்சுமாங்குடி, பாய்க்காரத்தெரு பாலம், பண்டுதக்குடி பாலம், காடுவெட்டி, நாகங்குடி, பழையனூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கடந்து செல்லும் இடங்களில் வெண்ணாற்றை ஆகாய தாமரை செடிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன.

மாசு படர்ந்த தண்ணீர்

இத்தகைய ஆகாய தாமரை செடிகள் ஆற்றில் தேங்கி நிற்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீர் கடைமடை பகுதி வரை முழுமையாக சென்றடைவதில் தாமதம் ஆகிறது. இதனால், விவசாய பணிகளும் பாதிக்கப்படுகின்றன. வெண்ணாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு செல்லக்கூடிய தண்ணீரும் சரிவர செல்வதில்லை. இவை மட்டுமின்றி ஆகாய தாமரை செடிகள் ஆற்றில் பல ஆண்டுகளாக தேங்கி நிற்பதால், அவைகளில் பல செடிகள் அழுகி போய் தேங்கி நிற்கும் தண்ணீரை மாசு படர்ந்த தண்ணீராக மாற்றி விடுகிறது.

தொற்றுேநாய் ஏற்படும் அபாயம்

இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகாய தாமரை செடிகள் சூழ்ந்துள்ள இடங்களில் கொசு உற்பத்தி அதிகரிப்பதால் குடியிருப்பு பகுதி வீடுகளில் உள்ளவர்கள் கொசுக்கடியால் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே விவசாய பணிகளுக்கும், சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story