மலர் செடிகள் நடவு செய்து அழகுபடுத்தப்படுமா?
முதுமலையில் மாயாற்றின் கரையோரம் மலர் செடிகள் நடவு செய்து அழகுபடுத்தப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்
முதுமலையில் மாயாற்றின் கரையோரம் மலர் செடிகள் நடவு செய்து அழகுபடுத்தப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
வளர்ப்பு யானைகள்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. இதன் அருகே கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா சரணாலயம் உள்ளன. காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இதனால் வெளிமாநிலம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு வனத்துறை சார்பில் வாகன சவாரி செய்யப்படுகிறது. இதுதவிர தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைக்கு காலை, மாலை நேரத்தில் ஊட்டச்சத்து உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். இதுதவிர முதுமலையில் வளர்ப்பு யானைகள் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் உள்பட முக்கிய தலைவர்களும் முதுமலைக்கு வந்தனர்.
காட்சிமுனை கோபுரம்
இதனால் முதுமலையின் மையமான தெப்பக்காடு பகுதியில் மாயாற்றின் கரையோரம் இருக்கைகள், காட்சி முனை கோபுரங்கள் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. தற்போது முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாயாற்றின் அழகை, அதன் கரையோரம் உள்ள இருக்கையில் அமர்ந்து ரசிக்கின்றனர். தொடர்ந்து காட்சி முனை கோபுரங்களில் நின்று இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். இதனால் மாயாற்றின் கரையோர பகுதியை மேலும் அழகுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- மாயாற்றின் கரையோரம் அடர்ந்த முட்புதர்கள் மட்டும் உள்ளதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனவே, ஆற்றின் கரையோரம் அலங்கார மற்றும் மலர் செடிகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும். மேலும் மாயாற்றின் கரையோரம் சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்கா உள்ளிட்ட அழகுபடுத்தும் திட்டத்தை மேற்கொண்டால் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.