குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?
குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல், குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்கலாம்.
புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்குமே லாயக்கற்ற நிலையில் அவை கிடக்கும். செடி கொடிகள் சுற்றிலும் முளைத்து நிற்பதுடன் விஷப்பூச்சிகளும் உள்ளே குடியிருக்க ஏதுவாக இருக்கும்.
கவலை இல்லை
இவைகளை ஏன் இப்படி போட்டு இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். அவைகள் எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன என்பார்கள். வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம் வாகனங்கள் உருப்படியாக இருக்க வேண்டுமே?.
அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் தினமும் போவார்கள். அவைகளை பைசல் செய்து யாருக்காவது பயன்படச் செய்யலாம் அல்லவா?. இப்படித்தான் அனைவருக்கும் நினைக்கத் தோன்றுகிறது.
வாகனங்கள் ஏலம்
இதுகுறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை காண முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும். அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகி விடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களா? மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே காண்போம்.
அதிக நஷ்டம்
சிவகாசி யோவான் செல்வராஜ்:-
பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், விபத்தில் சேதமடைந்து அதை சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப பெறாத வாகனங்கள் தற்போது பழைய இரும்பு கடையில் இரும்புகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பது போல் போலீஸ் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த வாகனத்தை வாங்கியவர்களுக்கு தான் அதிக நஷ்டம். சிவகாசி உட்கோட்டத்தில் சிவகாசி டவுன், திருத்தங்கல், சிவகாசி கிழக்கு, மாரனேரி, எம்.புதுப்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் 1000-க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை அந்த வழக்குகளை விரைந்து முடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால தாமதமான ஏலம்
வத்திராயிருப்பை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலன்:-
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பல மாதங்களாக போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வாகனங்கள் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நீண்ட காலத்திற்கு பிறகு ஏலம் விடப்படுகிறது. அவ்வாறு ஏலம் விடப்படும் வாகனங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் பழைய இரும்பு கடைகளுக்கு கொண்டு செல்கின்றனர். எனவே பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஏலம் விட்டால் வாகனங்கள் நல்ல நிலைமையில் உள்ள போதே பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
நல்ல விலை
அரசு வாகன ஏலதாரர் விருதுநகர் கலைச்செல்வன்:-
பொதுவாக கடந்த காலங்களை விட சமீபத்தில் நடந்த அரசு வாகன ஏலத்தில் வாகனங்கள் நல்ல விலைக்கு தான் விற்பனையாகியுள்ளது. வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் ஆண்டுக்கணக்கில் வெயிலிலும், மழையிலும் நிறுத்தப்பட்டு இருப்பதால் அவை சேதமடைந்து துருப்பிடித்து விடுகிறது. இதனால் அவற்றை இரும்பு ஸ்கிராப் விலைக்கு தான் ஏலத்தில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வப்போது இரும்பு ஸ்கிராப் என்ன விலையுள்ளதோ அதன் அடிப்படையில் அந்த வாகனங்களுக்கு விலை கிடைக்கும். எனவே காலந்தாழ்த்தாமல் குறுகிய இடைவெளியில் வாகன ஏலத்தை நடத்தினால் வாகனங்கள் ஓடும் நிலையில் இருப்பதால் நல்ல விலைக்கு போக வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட காலத்தில் ஏலம் விட்டால் தான் அரசுக்கு இந்த வாகன ஏலம் மூலம் நல்ல தொகை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரூ.2 கோடிக்கு வாகனங்கள் விற்பனை
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள்:-
போலீஸ் நிலையங்களிலும், மதுவிலக்கு போலீஸ் பிரிவிலும் மற்றும் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவுகளில் பல்வேறு காலகட்டங்களில் வழக்குகள் தொடர்பாக கைப்பற்றப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட வாகனங்கள் மற்றும் முடங்கியுள்ள வாகனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு அரசிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்த வாகனங்களை அரசிடம் அனுமதி பெற்று பொது ஏலத்தில் விடப்பட்டது. இதில் 595 வாகனங்கள் ரூ.2 கோடிக்கு மேல் ஏலம் விடப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொது ஏலத்தில் விற்பனையாகாத வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, அரசு மோட்டார் வாகன என்ஜினீயர் ஆகியோர் அடங்கிய குழுவினரிடம் மறு மதிப்பீடு பெற்று மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்ற பின் இந்த வாகனங்களும் பொது ஏலத்தில் விடப்படும். இனிவரும் காலங்களில் அரசு உத்தரவுப்படி இந்த வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை தாமதமினறி எடுக்கப்படும்.