சூரியசக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு விவசாய மின் இணைப்பு பெற பதிவு செய்யலாம்; மின்வாரிய அதிகாரி தகவல்


சூரியசக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு விவசாய மின் இணைப்பு பெற பதிவு செய்யலாம்; மின்வாரிய அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூரியசக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு விவசாய மின் இணைப்பு பெற பதிவு செய்யலாம் என்று விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாய மின் இணைப்பு

பிரதம மந்திரியின் குசம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக சூரியசக்தி மூலம் இயங்கக்கூடிய 7.5 எச்.பி. மின்பளு உள்ள மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சூரியசக்தி மின் பலகை அமைக்க ஆகும் செலவில் தலா 30 சதவீதம் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மானியமாகவும், எஞ்சியுள்ள 40 சதவீதத்தை தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்தின் உத்தரவாதத்தின்பேரில் அரசு வங்கிகளின் நிதி உதவியுடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு செய்யலாம்

சூரியசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.28 வீதம் நிதியுதவி வழங்கிய வங்கி கணக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செலுத்திடும். மேலும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து மின் தொகுப்பில் ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் விவசாயிக்கு 50 பைசா வீதம் ஊக்கத்தொகையாக வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தி பெருகுவதோடு மின் பாதையில் ஏற்படும் மின் இழப்பும் பெருமளவு குறைவதோடு தரமான மின்சாரம் கிடைக்க வழிவகை ஏற்படும். இத்திட்டத்தின்படி 7.5 எச்.பி. மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மட்டும் விவசாய மின் இணைப்பு வேண்டி தட்கல் திட்டம், சுயநிதி திட்டம் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் மற்றும் சாதாரண முன்னுரிமை திட்டம் ஆகிய திட்டங்களில் பதிவு செய்துள்ள விவசாய மின் இணைப்பு கோரும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி தங்கள் விருப்ப கடிதத்தை அளித்து பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story