உதயநிதியால் குரூப் 4 தேர்வு எழுத முடியுமா? அண்ணாமலை கடும் தாக்கு


உதயநிதியால் குரூப் 4  தேர்வு எழுத முடியுமா? அண்ணாமலை கடும் தாக்கு
x

அமைச்சர் உதயநிதிக்கு எதை பேச வேண்டும் எதை பேசக் கூடாது என தெரியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

சென்னை,

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதுவரை 21 உயிர்களை நீட் தேர்விற்கு பலி கொடுத்திருக்கிறோம். இவற்றை எல்லாம் நாம் தற்கொலை என பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நான் சொல்கிறேன். இந்த 21 மரணங்களும் தற்கொலை அல்ல. கொலை. இந்த கொலை செய்தது மத்திய பாஜக அரசு. அதற்கு துணைநின்றது அதிமுக. நான் நீட் குறித்து 5 ஆண்டுகளாக பேசிவிட்டேன்.

இனிமேலும் பேச தயாராக இருக்கிறேன். இங்கே ஒரு பக்கம் நாம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கவர்னர் ஆர்.என்.ரவி நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் போல் கூட்டம் நடத்தி வருகிறார். கவர்னர் ஒரு தபால்காரர். நீங்கள் ஆர்.என். ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ். ரவி. கவர்னருக்கு நான் சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதோ ஒரு தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு செய்யுங்கள்" என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது:- அமைச்சர் உதயநிதிக்கு எதை பேச வேண்டும் எதை பேசக் கூடாது என தெரியவில்லை. கவர்னர் தேர்தலில் நிற்க முடியுமா என கேட்டார். நான் கேட்கிறேன் , கவர்னர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதியால் குரூப் 4 தேர்வெழுத முடியுமா? திமுகவில் உள்ள சீனியர்கள் உதயநிதிக்கு அரசியலமைப்பு சட்டத்தை சொல்லித் தர வேண்டும். உதயநிதி எப்படி பேச வேண்டும் என கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.


Next Story