காஞ்சிரங்குளம், சித்திரக்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வைகை தண்ணீர் கொண்டு வரப்படுமா?
காஞ்சிரங்குளம், சித்திரக்குடி பறவைகள் சரணாலயத்தின் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி வைகை தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முதுகுளத்தூர்,
காஞ்சிரங்குளம், சித்திரக்குடி பறவைகள் சரணாலயத்தின் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி வைகை தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பறவைகள் சரணாலயம்
முதுகுளத்தூர் தாலுகாவில் காஞ்சிரங்குளம் மற்றும் சித்திரங்குடி ஆகிய கிராமங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. முதுகுளத்தூரில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம். 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சித்திரங்குடி பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதும் கூலைகடா, சாம்பல் நிற நாரை, செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரும். இவ்வாறு வரும் பறவைகள் சரணாலயத்தின் மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்ந்து வரும். பின்னர் கோடைகாலம் தொடங்கும் முன்பு குஞ்சுகளுடன் திரும்பி சென்று விடும்.
காஞ்சிரங்குளம் மற்றும் சித்திரக்குடி பறவைகள் சரணாலய கண்மாய் பல ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரபடாததுடன் வைகை தண்ணீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சரணாலயங்கள் கண்மாய்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காட்சியளித்து வருகின்றன. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே சரணாலயங்களுக்கு பறவைகள் வரத்து குறைந்துவிட்டது. ஒரு சில பறவைகள் மட்டுமே வந்தநிலையில் அதுவும் தண்ணீர் இல்லாமல் ஒரு சில மாதங்களிலேயே திரும்பி சென்று விட்டன. வைகை தண்ணீர் வராமல் கண்மாய்கள் வறண்டு உள்ளதால் இந்த கிராமத்தில் விவசாயமும் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது.
தூர்வார வேண்டும்
இது குறித்து சித்திரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் கூறும்போது, சித்திரக்குடி கண்மாய் தூர்வாரி 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். இந்த கண்மாய்க்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகவே வைகை தண்ணீர் வந்தது கிடையாது. குறிப்பாக வைகை தண்ணீர் வரக்கூடிய புல்வாய் குளம் கலுங்கு ஓடை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வரும் பாதை ஒரு பகுதி பள்ளமாகவும், இன்னொரு பகுதி மேடாகவும் உள்ளதால் தண்ணீர் வர வழியில்லாமல் போய்விட்டது. இந்த கண்மாயை தூர்வார வேண்டும் என்று பொதுப்பணித்துறை, வனத்துறைக்கும் மனு கொடுத்துள்ளோம். இதுவரையிலும் அனுமதியும் கிடைக்கவில்லை.
கண்மாயை தூர்வாரி வைகை தண்ணீர் கொண்டு வரும் பட்சத்தில் 48.5 ஹெக்டர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். பறவைகள் வரத்தும் அதிகமாகவே இருக்கும் என்றார்.
கோரிக்கை
காஞ்சிரங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவள்ளி கூறும்போது, காஞ்சிரங்குளம் கண்மாய் தூர்வாரி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். இதுகுறித்து அதிகாரிகளுக்கும், முதல்-அமைச்சருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இங்கு வைகை தண்ணீர் வரும் பட்சத்தில் காஞ்சிரங்குளம், எட்டிசேரி, கருங்குளம் உள்ளிட்ட 3 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே வரும் ஆண்டிலாவது காஞ்சிரங்குளம் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரும் பாதையை சரி செய்து தண்ணீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ள காஞ்சிரங்குளம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயங்களுக்கும் வைகை தண்ணீர் கொண்டு வந்து பறவைகள் அதிகமாக இனப்பெருக்க சீசனில் வந்து செல்வதற்கான நடவடிக்கைகளையும் வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து உடனடியாக செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.