கன்னடியன் கால்வாய் தூர்வாரும் பணி; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


கன்னடியன் கால்வாய் தூர்வாரும் பணி; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

பத்தமடையில் கன்னடியன் கால்வாய் தூர்வாரும் பணியை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடையில் கன்னடியன் கால்வாய் தூர்வாரும் பணியை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கால்வாய் தூர்வாரும் பணி

அம்பை சட்டமன்ற தொகுதியின் பிரதான கால்வாயாக கன்னடியன் கால்வாய் உள்ளது. கல்லிடைக்குறிச்சியில் தொடங்கி பிராஞ்சேரி வரை இந்த கால்வாய் மூலமாக சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் அமலைச்செடிகளாள், குப்பைகள் நிறைந்துள்ளது. இதனால் கடைமடை விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கப்பெறுவது இல்லை. மேலும் அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் தாமிரபரணி ஆறு மற்றும் கன்னடியன் கால்வாயில் குறைந்தளவு தண்ணீரே செல்கிறது. எனவே கன்னடியன் கால்வாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து இதுகுறித்து அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவிடமும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் கால்வாயை தூர்வாரும் பணியை தொடங்கினார். முதல்கட்டமாக பத்தமடையில் கன்னடியன் கால்வாயை தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேரன்மாதேவி, வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் கால்வாயை தூர்வார இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வருகிற 1-ந்தேதி காரையார் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். அப்போதுதான் மழை பெய்யும் என்பது ஐதீகம். எனவே குறிப்பிட்ட அளவு தண்ணீராவது அதிகாரிகள் திறந்துவிட வேண்டும். மேலும் கன்னடியன் கால்வாயில் சிமெண்டு தளம் அமைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், நகர செயலாளர்கள் சேரன்மாதேவி வக்கீல் பழனிகுமார், மேலச்செவல் முருகன், வீரவநல்லூர் முருகேசன், மாநில பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கால்பந்து போட்டி

சிவந்திபுரத்தில் நாடார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 86-ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை, திருவனந்தபுரம் கோவை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சாத்தூர், காயல்பட்டினம், நாகர்கோவில், தென்காசி, நெல்லை, சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி, முதலியார்பட்டி, விக்கிரமசிங்கபுரம், அய்யனார்குளம் ஆகிய அணிகள் விளையாடின.

நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் சென்னை அணியும் திருவனந்தபுரம் அணியும் விளையாடியது. இதில் திருவனந்தபுரம் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை ெவன்றது. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முதல் பரிசான ரூ.25 ஆயிரத்தை சுரேஷ் மனோகரனும், 2-ம் பரிசான ரூ.10 ஆயிரத்தை அந்தோணி ராஜிம், 3-ம் பரிசான ரூ.5 ஆயிரத்தை நடராஜனும் வழங்கினார்கள். முன்னதாக கால்பந்து போட்டியை மயோபதி காப்பக உரிமையாளர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

மாநில கால்பந்து வீரர் மார்ட்டின், விளையாட்டு ஆலோசகர் மனோகரன் சாமுவேல், மாவட்ட கால்பந்தாட்ட கழக முன்னாள் செயலாளர் நோபுள்ராஜன், அ.தி.மு.க. அம்பை ஒன்றிய செயலாளர் துர்க்கை துரை, துணை செயலாளர் பிராங்கிளின், மணிமுத்தாறு நகர செயலாளர் ராமையா, வக்கீல்கள் செல்வ அந்தோணி, ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாடார் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் திரவியகனி, செயலாளர் ஜெயராமன், பொருளாளர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story