அமராவதி பிரதான கால்வாயின் பாதுகாப்பு கருதி பக்கவாட்டு தடுப்பு


அமராவதி பிரதான கால்வாயின் பாதுகாப்பு கருதி பக்கவாட்டு தடுப்பு
x

மடத்துக்குளம் அருகே உள்ள சாமராயப்பட்டியில் அமராவதி பிரதான கால்வாயின் பாதுகாப்பு கருதி பக்கவாட்டு தடுப்பு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

மடத்துக்குளம் அருகே உள்ள சாமராயப்பட்டியில் அமராவதி பிரதான கால்வாயின் பாதுகாப்பு கருதி பக்கவாட்டு தடுப்பு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரை உடைப்பு

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய பாசன ஆதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. அமராவதி அணையிலிருந்து தொடங்கி சுமார் 63 கிலோ மீட்டர் பயணம் செய்து தாராபுரம் தாலுகாவில் முடிவடையும் பிரதான கால்வாய் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நிலத்தடி நீராதாரங்களை மேம்படுத்தவும், கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் கால்வாய் நீர் உதவுகிறது.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் கால்வாயில் உயிர் தண்ணீர் திறந்து விடப்பட்ட போது சாமராயப்பட்டி பகுதியில் கரை உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து துரித அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது உயிர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

விபத்து அபாயம்

சாமராயப்பட்டி பகுதியில் கால்வாய் கரையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கால்வாய் கரையில் மண் தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை பயன்படுத்தி தான் அதிகாரிகள் இரவு பகலாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளைபொருட்களை கொண்டு வரவும் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கால்வாய் கரையை ஒட்டிய மண் வழித்தடம் கால்வாய் மட்டத்திலிருந்து அதிக உயரமாகவும், மண் குவியலாகவும் உள்ளது. இந்த பகுதி ஊரை ஒட்டி அமைந்துள்ளதால் சிறுவர்கள் இங்கு விளையாடுகின்றனர். அவர்கள் எதிர்பாராதவிதமாக மண் குவியலில் சறுக்கினால் கால்வாய்க்குள் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

பக்கவாட்டு தடுப்பு

இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கால்வாய் மற்றும் பக்கவாட்டிலுள்ள வெள்ள நீர் போக்கி அமைப்பில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் குறிப்பிட்ட தொலைவு வரை, பிரதான கால்வாய் கரையில் பக்கவாட்டு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய் கரையில் ஆபத்தான முறையில் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறி, குடிமகன்கள் கால்வாயில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இந்த பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீசாரும் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும்'.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


Related Tags :
Next Story