வாய்க்காலில் கான்கிரீட் சுரங்கம் அமைக்கும் பணி
உடுமலை மானுப்பட்டி பகுதியில் வாய்க்காலில் கான்கிரீட் சுரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உடுமலை மானுப்பட்டி பகுதியில் வாய்க்காலில் கான்கிரீட் சுரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பி.ஏ.பி.வாய்க்கால்
உடுமலைைய அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணையின் மூலமாக பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. சீரான தண்ணீர் வினியோகத்திற்கு ஏதுவாக பி.ஏ.பி. பிரதான கால்வாய், உடுமலை, பூலாங்கிணர், உயர்மட்ட கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் கட்டப்பட்டு உள்ளது.
அதன் மூலமாக விவசாயிகள் தண்ணீரை பெற்று நீண்ட, மத்திய, குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். பிரதான கால்வாய்களை தவிர கிளை வாய்க்கால் செல்லும் பகுதியில் ஆங்காங்கே ஓடைகள், வழித்தடங்கள் குறுக்கீடு செய்வது வாடிக்கையான ஒன்றாகும். அதை தண்ணீர் கடந்து செல்வதற்கு ஏதுவாக இரண்டு புறங்களிலும் நீர்இறங்கு குழி அமைக்கப்பட்டு அதற்கு குழாய் மூலம் இணைப்பு ஏற்படுத்தப்படும். இதனால் கால்வாயில் தண்ணீர் வரும்போது ஒருபுறம் உள்ள குழியில் இறங்கி மறுபுறம் வழியாக வெளியே வந்து பாசன நிலங்களுக்கு சென்று விடும்.
கான்கிரீட் சுரங்கம்
இந்த சூழலில் நீர் இறங்கு குழிகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட குழாய்கள் பல ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் அதில் உடைப்புகள் ஏற்பட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அவற்றை புதுப்பித்து தரக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் உடுமலை கால்வாய்க்கு உட்பட்ட மானுப்பட்டி வாய்க்கால் பகுதியில் மூன்று இடங்களில் குழாய்கள் அகற்றப்பட்டு கான்கிரீட் சுரங்கம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் குழாயை விடவும் கான்கிரீட் சுரங்கம் மூலம் அதிக அளவில் தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று தெரிவித்தனர்.