கால்வாய் தூர்வாரும் பணி, சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை கலெக்டர் ஆய்வு


கால்வாய் தூர்வாரும் பணி, சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை கலெக்டர் ஆய்வு
x

அரக்கோணத்தில் கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

வடகிழக்கு பருவமழையையொட்டி அரக்கோணம் ஜோதி நகர் பகுதியில் திருத்தணி சாலையில் உள்ள கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க இது போன்று நகரத்தில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து போலாச்சி அம்மன் நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியை பார்வையிட்டபோது, பழைய கட்டிடத்தின் உறுதித் தன்மை சான்றிதழும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு மண் பரிசோதனை சான்றிதழும் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் கேட்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப் பெற்றவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் இரண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு மாலையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருவதையறிந்த கலெக்டர் மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் மாணவ, மாணவியர்கள் திருக்குறள்களை பார்க்காமல் சொல்வதையும் பார்வையிட்டு மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டினார்.

புதிய கட்டிடம்

இதனையடுத்து ரெட்டைமலை சீனிவாசன் தெருவில் உள்ள நகராட்சி அரசு ஆரம்ப பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டிடத்தையும், மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் தொண்டு நிறுவன கட்டிடத்தில் தற்காலிகமாக பயின்று வருவதையும் பார்வையிட்டு விரைவாக பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும், பள்ளி வளாகத்தில் நடக்கும் இரண்டு அங்கன்வாடி மையங்கள் மிகவும் இட நெருக்கடியில் உள்ளது என்றும், இதை மாற்று இடத்தில் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளதால் இதனை மாற்ற பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் பழனிராஜன், நகராட்சி ஆணையர் லதா, நகரமன்ற துணைத்தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ், நகராட்சி பொறியாளார் ஆசிர்வாதம் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


Next Story