கால்வாய்களை தூர்வார வேண்டும்
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வால்பாறையில் கால்வாய்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வால்பாறை
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வால்பாறையில் கால்வாய்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கால்வாயில் அடைப்பு
மலைப்பிரதேசமான வால்பாறையை ஒட்டியுள்ள கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் வால்பாறையில் தென்மெற்கு பருவமழை பெய்ய தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் வால்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது, வால்பாறையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும். இதனால் குடியிருப்பு பகுதிகளில் மண் சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
தூர்வார வேண்டும்
தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வால்பாறை பகுதியில் உள்ள சில கால்வாய்களில் மண் சரிந்து கிடக்கிறது. இதனால் கனமழை பெய்யும் சமயங்களில், தண்ணீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கழிவுநீர் கால்வாய்களில் கடந்த ஆண்டில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைநீர் தேங்காமல் தங்கு தடையின்றி கால்வாயில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். பருவமழையின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றனர்.