சிறுமியை கடத்தி சென்றவருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்யுங்கள்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிறுமியை கடத்தி சென்றவருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்யுங்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுமி மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் முதியவர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, சம்பந்தப்பட்ட மைனர் பெண் அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் சென்றுள்ளார். அதே நபருடன் ஏற்கனவே இருமுறை சென்று மீட்கப்பட்டார். இதுசம்பந்தமாக மகேந்திரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவருக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதன் காரணமாக தலைமறைவான அவர், இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்டு நிலுவையில் உள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், போக்சோ வழக்கில் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் பேத்தியான சிறுமியை மீட்டு திண்டுக்கல் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். பின்னர் அவர் தொடர்பான வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.