நிலக்கரி சுரங்க டெண்டர் ரத்து- முதல் அமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி... உதயநிதி ஸ்டாலின்
முதல் அமைச்சரின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு திட்டத்தை கைவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசு சார்பில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு நிலக்கரி எடுக்க கூடுதல் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்த நிலையில், தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவு முதல் அமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி தனது ட்விட்டரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது டுவீட்டரில் கூறும்போது; காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. விவசாயம்காப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.