தேர்தல் பத்திரம் ரத்து; பா.ஜ.க.வின் முகத்திரையை நீதித்துறை கிழித்துள்ளது - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.


தேர்தல் பத்திரம் ரத்து; பா.ஜ.க.வின் முகத்திரையை நீதித்துறை கிழித்துள்ளது - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
x

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தை தலைநிமிர வைத்துள்ளது என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சென்னை,

தேர்தல் பத்திரம் தொடர்பான தீர்ப்பின் மூலமாக பாசிச சக்திகளின் முகத்திரையை இந்திய நீதித்துறை கிழித்தெறிந்து இருக்கிறது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்திட 2018-ல் மத்திய அரசு "தேர்தல் பத்திரங்கள்" என்ற பெயரில் ஒரு பித்தலாட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பவர்கள் "எஸ்.பி.ஐ." வங்கிக்குச் சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனிநபர்கள் நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.

ஒரு நபர் (அல்லது) நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற சட்டவிரோத சட்டத்தை இயற்றி, புனிதபடுத்தப்பட்ட பித்தலாட்டம்தான் இந்த "தேர்தல் பத்திரம்" திட்டம். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனிநபர் நிறுவனங்கள் யார் என்று விவரங்கள் பொதுமக்களுக்கு நன்கொடையாகப் பெரும் அரசியல் கட்சிகளுக்கோ அளிக்கப்படாது.

இதன் அடிப்படையில், பா.ஜ.க., சட்டப்பூர்வமான லஞ்சம் பெறும் திட்டமான தேர்தல் பத்திரம் திட்டத்தினைப் பயன்படுத்தி, 2018-ம் ஆண்டு முதல் கடந்த நிதியாண்டு வரை, சுமார் 6,564 கோடி ரூபாய் பணத்தை சட்டப்பூர்வமாகச் சுருட்டி உள்ளது. இது ஓர் அப்பட்டமான, சட்டப்பூர்வ ஊழல் ஆகும்.

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அரசைக் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாகவும், மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19 உட்பிரிவு (1) ஆகியவற்றை மீறும் வகையில் இந்த திட்டம் உள்ளதாகவும், கருப்புப் பணத்தைத் தடுக்கத் தேர்தல் பத்திரங்கள் அனுமதிக்கிறோம் என்ற பாஜக அரசு சொல்லும் பொய்கள் ஏற்கத்தக்கது அல்ல எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு நீதிமன்றங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை மீண்டும் அதிகப்படுத்தி இருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் லஞ்சத்துக்கு வழி வகுக்கும் எனவும், அரசியல் கட்சிகளுக்கு யார் பணம் தருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உண்டுஎனவும் தெரிவித்த நீதிபதிகள், "தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது" எனக் கூறி அதனை ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பது, மிக்க மன மகிழ்வைத் தந்துள்ளது.

ஜனநாயகத்தின் அடித்தளமான தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகளுக்கு வரும் நிதி ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக அமைவதற்கு இந்தத் தீர்ப்பு வழி வகுத்துள்ளது. ஜனநாயகத்தை இத்தீர்ப்பு தலைநிமிர வைத்துள்ளது. ஊழலுக்கு எதிராக போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க.வின் பெரிய மிகப் பெரிய ஊழல் இது.

அதிகாரம் அவர்கள் கைகளில் இருக்கும் வரை, இத்தகைய பித்தலாட்டச் செயல்களை அரங்கேற்றத் துளியும் தயங்காத பாசிச சக்திகளின் முகத்திரையை இந்திய நீதித்துறை கிழித்தெறிந்து இருக்கிறது. வெளிப்படைத் தன்மையில்லாத பிஎம் கேர் நிதிக்கும் இதேபோல் ஒரு தீர்ப்பு வர வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story