பொது தகவல் அதிகாரிக்கு விதித்த அபராதம் ரத்து -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பொது தகவல் அதிகாரிக்கு விதித்த அபராதம் ரத்து -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பொது தகவல் அதிகாரிக்கு விதித்த அபராதம் ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


புதுக்கோட்டை மாவட்ட பொது தகவல் அலுவலராகவும், மாவட்ட வருவாய் அதிகாரியின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றிய சகாயராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கடந்த 2011- ம் ஆண்டில் சில தகவல்களை கேட்டு இருந்தார். அவர் எழுப்பியிருந்த கேள்விகளில் சில விவரங்களை புதுக்கோட்டை தாசில்தாரிடம் பெறுமாறு விளக்கம் அளித்தேன். இதை எதிர்த்து அவர், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவிற்கு பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2012-ல் ஆணையத்தின் முன் நான் ஆஜராகி, எனது தரப்பு விளக்கத்தை அளித்தேன். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி எனக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் தாசில்தார் வசம் தான் இருந்தது. அவரால் தான் சரியான விளக்கம் அளிக்க முடியும். எனவேதான் அதற்குரிய பதிலை அளித்தேன். எனக்கு அபராதம் விதித்த ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி, மனுதாரர் தரப்பு விளக்கத்தின் மீது கவனம் செலுத்தாமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளார்.


Next Story