சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வரும் 17-ந்தேதி வரை இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னையின் புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில்கள் உள்ளது. கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர்மார்க்கெட் - அரக்கோணம், மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டை ஆகிய 3 வழித்தடங்களில் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடற்கரை-வேளச்சேரி இடையிலான பறக்கும் ரெயில் சேவையில் 4-வது வழித்தட பணி காரணமாக சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி வரையில் மட்டுமே தற்போது ரெயில் சேவை இயக்கப்படுகிறது. பயணிகளின் கோரிக்கை மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவை அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கடற்கரை-தாம்பரம் இடையே சுமார் 40-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில், அக்டோபர் 3-ந்தேதி முதல் வரும் 17-ந்தேதி வரையில் கடற்கரை-தாம்பரம் இடையில் இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இரவு சேவை ரத்து

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் பணிமனையில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நள்ளிரவு 12.25 மணி முதல் 2.25 மணி வரை 2 மணி நேரம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் இரவு நேரம் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்.40149), தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு புறப்படும் ரெயில் (40150) ஆகியவை வரும் 17-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் ரெயில் (40420) வரும் 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story