ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி - கல்லூரி முதல்வர் ஜெயந்தி பங்கேற்பு


ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி - கல்லூரி முதல்வர் ஜெயந்தி பங்கேற்பு
x

ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜெயந்தி பங்கேற்றார்.

சென்னை

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ந்தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் புற்றுநோய் தின கோட்பாடாக 'க்ளோஸ் த கேர் கேப்' எனும் முக்கிய குறிக்கோளுடன் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று அரங்கேறியது. தமிழ்நாடு அரசின் 'மக்களை தேடி மருத்துவம்' எனும் திட்டத்தில் அனைவரும் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சையை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக பெறமுடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி பேசியதாவது:- 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுயபரிசோதனை செய்து கொள்ளவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம். ஆரம்பகாலத்தில் கண்டறியப்படும் பெரும்பாலான புற்றுநோய்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் முற்றிலுமாக குணப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் குறுநாடகம் மூலம் ஆரம்ப நிலை பரிசோதனைகள், மருத்துவ சேவைகள் குறித்து விளக்கினர். இந்தநிகழ்ச்சியில் துணை முதல்வர் விஜய் சதீஷ்குமார், டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


Next Story