கார்த்திகைதீப அகல்விளக்குகள்


புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல்

கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

அகல் விளக்குகள்

மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் முளைத்திருக்கின்றன.

விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ரெடிமேடு விளக்குகள்

இவை ஒருபுறம் இருக்க தற்போது மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன.

இதனால் களிமண்ணால் செய்யப்படும் பாரம்பரிய அகல்விளக்குகள் அவைகளோடு போட்டியிட முடியாமல் மெல்ல மெல்ல அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் பாத்திரங்கள், அலங்காரப்பொருட்களில் உலோகங்களின் ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருந்தவர்கள் கட்டுமானம் போன்ற இதர வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

ஒளி இழந்த தொழில்

பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த அகல் விளக்கு உற்பத்தியாளர் வீரமலை கூறியதாவது:-

நான் இந்த தொழிலை சுமார் 40 ஆண்டுகளாக செய்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு சக்கரம் மூலம் அகல்விளக்கை தயார் செய்து விற்பனை செய்து வந்தோம். நாகரிக மாற்றம், விளக்கு தொழிலிலும் மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது. தற்போது எந்திரங்களை பயன்படுத்தி விளக்கு தயார் செய்து வருகிறோம்.

இந்த விளக்கு செய்வதற்கு தேவையான மண்ணை திருச்சி மாவட்டத்தில் இருந்து வாங்கி வருகிறோம். இதனால் போக்குவரத்து செலவு அதிகரித்து உள்ளது. ஒரு யூனிட் மண்ணை இங்கு கொண்டு வர ரூ.12 ஆயிரம் தேவைப்படுகிறது. இதேபோல் பொதுவாக சூளையை ஏரிகளில் வைப்போம். ஆனால் இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி விட்டதால், சூளை வைக்க இடம் இன்றி தவித்து வருகிறோம்.

மண் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருவதால் அகல்விளக்கு தொழில் ஆண்டுதோறும் சரிவை நோக்கியே செல்கிறது. அகல்விளக்கு மீது நாட்டம் கொண்ட மக்கள் மட்டுமே தொடர்ந்து ஆதரவு அளிக்கிறார்கள். எதிலும் புதுமாடலை விரும்புவோர்களின் பார்வை, ரெடிமெட் டிசைன் விளக்குகள் மீதுதான் இருக்கிறது. மண்பாண்ட தொழிலாளர்கள், விற்பனையாளர்களின் வாழ்க்கை ஒளி இழந்தே இருக்கிறது.

அகல் விளக்குகளுக்கு மவுசு

நாமக்கல்லை சேர்ந்த அகல்விளக்கு வியாபாரி பழனிசாமி:-

நான் இந்த தொழிலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறேன். கார்த்திகை தீபம் பண்டிகை வந்துவிட்டாலே அகல்விளக்கு விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். மக்கள் நீண்டநேரம் காத்திருந்து வாங்கிச் செல்வார்கள்.

தற்போது நான் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் இருந்து அகல்விளக்குகளை விற்பனைக்கு வாங்கி வைத்து உள்ளேன். இந்த ஆண்டு ஏரிகளில் தண்ணீர் நிரம்பி விட்டதால் அகல்விளக்கு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அதன் விலை சற்று உயர்ந்து உள்ளது. இருப்பினும் களிமண்ணால் தயாரிக்கப்படும் அகல்விளக்குகளை பயன்படுத்துவோர் தேடி வருகிறார்கள். மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்தாலும் அகல் விளக்குகளுக்கு மவுசு இருக்கதான் செய்கிறது.

இறை வழிபாட்டில்

அர்ச்சகர் சிவசிதம்பரம் குருக்கள்:-

பொதுவாக இறை வழிபாட்டில், இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரவேண்டும். வீட்டில் அகல்விளக்கு ஏற்றி இறைவனை மனத்துக்குள் கொண்டு வருவதே கார்த்திகை தீபத்தின் நோக்கமாக இருக்கிறது. எனவே இந்த தீபத்திருநாளில் களிமண்ணால் தயார்செய்யப்பட்ட அகல்விளக்குகளை ஏற்றிவைப்பதே சாலச்சிறந்தது.

அகல்விளக்கில் ஊற்றப்படும் எண்ணெய் கரைதல், திரி கருகுதலில் தியாகம் என்ற வாழ்வியல் தத்துவம் அடங்கி உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

புதிய அகல் விளக்கு

மோகனூரை சேர்ந்த இல்லத்தரசி சித்ரா:-

கார்த்திகை திருநாளாக இருந்தாலும் சரி, இதர நாட்களாக இருந்தாலும் சரி களிமண்ணால் தயாரிக்கப்படும் அகல்விளக்குகளை ஏற்றுவதுதான் மனதுக்கு நிம்மதி அளிக்கிறது. ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாளின்போது புதிதாக அகல்விளக்குகள் வாங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளேன். இந்த ஆண்டும் தேவையான அகல் விளக்குகளை வாங்கி விட்டேன்.

கடைகளில் அகல்விளக்கு வைக்கப்படும் வரிசையில் ரெடிமெட் மெழுகுவிளக்குகள் கண்ணைக் கவரும் வகையில் வைக்கப்பட்டிருந்தாலும் எனது மனம் அகல்விளக்கை தான் தேடும். நாகரிகம் என்ற பெயரில் இறைவழிபாட்டில் ரெடிமேட் பொருட்கள் விற்பனைக்கு வந்திருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story