மனைவியின் தலையில் அம்மிக்கல்லைபோட்டு கொன்ற கட்டிட மேஸ்திரி


தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 4:09 PM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டை அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

கட்டிட மேஸ்திரி

சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கோவிந்தன் (வயது 39). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராதா (33). இவர் வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா (11) என்ற மகளும், கோகுல் (7) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் ராதா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களாக கோவிந்தன் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே ஈச்சம்பாறையில் உள்ள அவரது மாமனார் ரமணா வீட்டில் ராதா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கொலை

இந்த நிலையில் கோவிந்தன் அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு கோவிந்தன் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. வீடடில் மனைவி ராதா, குழந்தைகளுடன் தனியாக ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். மாமனாரும், மாமியாரும் வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது மதுபோதையில் இருந்த கோவிந்தன் தூங்கிக் கொண்டிருந்த ராதாவின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ராதா அலறினார். அவரது அலறலை கேட்டு குழந்தைகளும் சத்தம் போட்டனர். இதைக் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த ராதாவை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

3 மணி நேரத்தில் கைது

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் நாமகிரிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கோவிந்தனை கைது செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் தலைமறைவாக இருந்த கோவிந்தனை ஈச்சப்பாறை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கைது செய்தனர். கொலை நடந்த 3 மணி நேரத்தில் கொலையாளியை தனிப்படை போலீசார் கைது செய்ததற்கு பொதுமக்கள் பாராட்டினர்.

சிறையில் அடைப்பு

இந்த சம்பவம் பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட கோவிந்தனை சிறையில் அடைப்பதற்காக ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கட்டிட மேஸ்திரி அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொலை செய்த விபரீத சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story