தெருநாய்களை பிடித்து கருத்தடை
கோவை மாநகர பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ஆர்.எஸ்.புரம்
கோவை மாநகர பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
தெருநாய்கள் தொல்லை
கோவை மாநகர பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பல இடங்களில் கூட்டம், கூட்டமாக தெருக்கள் மற்றும் சாலைகளில் உலா வரும் தெருநாய்கள், அந்த வழியாக செல்பவர்களை துரத்தி கடிக்கின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. சாலையின் நடுவே ஹாயாக படுத்துக்கொண்டு அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துகிறது.
அத்துடன் திடீரென்று வாகனத்துக்குள் பாய்வதால், அதில் செல்பவர்கள் கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இந்த தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பிடிக்கும் பணி
இதையடுத்து மாநகர பகுதியில் இருக்கும் தெருநாய்களின் எண்ணிக்கையை கண்டறிய அவற்றை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதில் கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் கோவை வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் பலரை தெருநாய்கள் துரத்துவதுடன் கடித்து குதறியதாக புகார் வந்தது. இதனால் நேற்று அங்கு சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக மாநகராட்சி ஊழியர்களுடன் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இணைந்து, சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இது குறித்து மநாகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கருத்தடை
கோவை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணி 2 தொண்டு நிறுவனங்கள் மூலம் நடந்து வருகிறது. அதில் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் தெருநாய்களை பிடிக்க தலா 2 வாகனங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று மேற்கு, வடக்கு மண்டலங்களில் தெருநாய்களை பிடிக்க தலா 1 வாகனம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையம் பகுதியில் தெருநாய்களை பிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் அதே பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நாய்களை வளர்க்கும் பொதுமக்கள் அந்த நாய்களுக்கு முறையாக தடுப்பூசி போட்டு அவற்றை வெளியே திரியவிடாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.