கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்யப்பட்ட காரை ஏலம் விட கோர்ட்டில் மனு


கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்யப்பட்ட காரை ஏலம் விட கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்யப்பட்ட காரை ஏலம் விடக்கோரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இழப்பீட்டு தொகை

நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 1993-ம் ஆண்டு பேளுக்குறிச்சியை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் (வயது 83) என்பவரிடம் இருந்து, ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக வீடு கட்டுவதற்காக 1 ஏக்கர் 76½ சென்ட் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.

இதற்கு ஏக்கர் கணக்கில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு, ஆறுதல் தொகையுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 434 வழங்கப்பட்டது. இந்த தொகை போதுமானதாக இல்லை என்றும், சதுரஅடி கணக்கில் இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் எனவும் ராமலிங்கம் தரப்பில் நாமக்கல் சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சப்-கோர்ட்டு ராமலிங்கத்திற்கு சதுர அடிக்கு ரூ.25 வீதம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

கார் ஜப்தி

ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், விவசாயி ராமலிங்கத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து ராமலிங்கம் தரப்பில் தங்களுக்கு வட்டியுடன் சேர்த்து வர வேண்டிய பாக்கி தொகை சுமார் ரூ.1 கோடியே 42 லட்சத்து 87 ஆயிரத்து 328-ஐ பெற்று தருமாறு நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சப்-கோர்ட்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் உள்ள 2 கார்கள் மற்றும் தளவாட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது.இதன் தொடர்ச்சியாக கோர்ட்டு அமீனாவுடன் கடந்த ஜூன் மாதம் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த ராமலிங்கம், கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் உள்ள ஒரு காரை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு எடுத்து செல்ல முயன்றார். ஆனால் டிரைவர் யார் என்று தெரியாத காரணத்தாலும், சாவி கிடைக்காததாலும் காரின் பின்புற கண்ணாடியில் கோர்ட்டு உத்தரவை ஒட்டி விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.

கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டது

இதற்கிடையே அந்த கார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.

ஜப்தி செய்யப்பட்டு சுமார் 9 மாதங்கள் ஆகியும் இழப்பீட்டு தொகை கிடைக்காததால் காரை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமலிங்கம் தரப்பில் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story