கார்-ஆட்டோ மோதல்; தொழிலாளி பலி


கார்-ஆட்டோ மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுபாக்கம் அருகே கார்-ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பாிதாபமாக இறந்தார். உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வரும் வழியில் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடலூர்

சிறுபாக்கம்,

திருமண நிகழ்ச்சிக்கு

சிறுபாக்கம் அருகே உள்ள ரெட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு(வயது 70). இவர் நேற்று காலை அடரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். திருமணம் முடிந்த பின்னர் தங்கராசு அங்கிருந்து குடும்பத்துடன் ஆட்டோவில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் ராஜா(45) ஆட்டோவை ஓட்டினார். நேற்று காலை 7 மணியளவில் வேப்பூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாக்கத்தை அடுத்த காஞ்சிராங்குளம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே வந்த கார் ஆட்டோ மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது.

தொழிலாளி சாவு

இதில் படுகாயம் அடைந்து ஆட்டோவில் பயணித்த ரெட்டாக்குறிச்சி கிராமம் தொழிலாளி முனியன்(65) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த தங்கராசு, இவரது மனைவி லட்சுமி(60), ஆட்டோ டிரைவர் ராஜா, இவரது மனைவி உமா(40) ஆகிய 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

விபத்து பற்றிய தகவல் அறிந்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா, தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான முனியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான ஆட்டோ, காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலை விரிவாக்கப்பணி

கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணிகள் மந்தமாக நடைபெறுவதால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்வதாகவும், எனவே சாலைப்பணிகளை துரிதப்படுத்தி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story