ஓமலூர் அருகே கார்கள் மோதல்: நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது-6 பேர் உயிர் தப்பினர்


ஓமலூர் அருகே கார்கள் மோதல்: நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது-6 பேர் உயிர் தப்பினர்
x

ஓமலூர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கிய கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணம் செய்த 6 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

சேலம்

ஓமலூர்:

கார்கள் மோதல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி அருகே உள்ள எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருடைய மகளுக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதற்காக முரளி எலத்தூரில் இருந்து தீவட்டிப்பட்டிக்கு இலை வாங்குவதற்காக காரில் சென்றார்.

எலத்தூர் அருகே சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார், முரளியின் கார் மீது மோதியதுடன் அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

கார் எரிந்து சேதம்

காரில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு காரை விட்டு இறங்கினர். தொடர்ந்து கார் முழுவதுமாக மளமளவென பற்றி எரிந்தது. தகவல் அறிந்த காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஈடுபட்டனர்.

அப்படி இருந்தும் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. காரில் வந்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே முரளியின் காரும் சேதம் அடைந்தது. அவரும் லேசான காயம் அடைந்தார். அவர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 2 கார்களிலும் பயணம் செய்த 6 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சம்பவத்தால் சேலம்- பெங்களூரு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.

போலீசார் தீப்பிடித்து எரிந்த கார் மற்றும் விபத்தில் சிக்கிய இன்னொரு கார் இரண்டையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story