டேங்கர் லாரி மீது கார் மோதல்; 2 பேர் காயம்
டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் மகன் ஜீவன் சேது (வயது 51). இவர் நேற்று தனது மனைவியுடன் காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை ஜீவன் சேது ஓட்டினார். உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது காரின் முன்பக்க டயர் திடீரென எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மறுபுறம் சென்று அந்த வழியாக வந்துகொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரியில் மோதியது. இந்த விபத்தில் கார், டேங்கர் லாரி பலத்த சேதமடைந்தது. மேலும் விபத்தில் ஜீவன்சேது மற்றும் லாரி ஓட்டுனரான வடலூரை சேர்ந்த தட்சணாமூர்த்தி ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.