கார் மோதி கூலி தொழிலாளி பலி
திருமங்கலம் அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலியானார்.
திருமங்கலம்,
விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 56). கூலித்தொழிலாளி. இவர் நேற்று விருதுநகரில் இருந்து மையிட்டான்பட்டி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் பலசரக்கு சாமான்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் திருமங்கலத்திற்கு சென்றார். அப்போது கள்ளிக்குடி நான்குவழிச் சாலை பகுதியில் சென்ற போது, விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பரமசிவம் பலத்த காயமடைந்தார். தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பரமசிவம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் கார் டிரைவர் இந்திரஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.