புளிய மரத்தில் கார் மோதி பெண் பலி
பென்னாகரம் அருகே புளிய மரத்தில் கார் மோதி போலீஸ்காரரின் தாயார் பலியானார். போலீஸ் தம்பதி, குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
பென்னாகரம்:
போலீஸ் தம்பதி
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 35). போலீஸ்காரான இவர் சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா (33). இவர் சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களுடன் விஜயகுமாரின் தாயார் முல்லை (65) வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர்கள் சென்னையில் இருந்து காரில் ஏரியூருக்கு புறப்பட்டனர். காரை போலீஸ்காரர் விஜயகுமார் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை பென்னாகரத்தை அடுத்த ஆதனூர் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
பெண் பலி
இந்த விபத்தில் விஜயகுமாரின் தாயார் முல்லை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விஜயகுமார், இவரது மனைவி மற்றும் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த முல்லையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.