மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்; தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்; தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயம்
x

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா அகரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40). இவரது மனைவி முத்துலெட்சுமி (32). அம்மாசி மகன் கிருஷ்ணமூர்த்தி (37), இவரது மனைவி தேன்மொழி (30). இவர்கள் 4 பேரும் நேற்று காலை சொந்த வேலை காரணமாக 2 மோட்டார் சைக்கிள்களில் விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமகவுண்டம்பட்டி அருகே வந்தபோது, பின்னால் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயம்

இதில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். கார் டிரைவரான மதுரை மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் (60) என்பவரும் காயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் மற்றும் இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த நாகராஜ், முத்துலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, தேன்மொழி மற்றும் நடராஜன் ஆகிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story