மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்; மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றியதால் பரபரப்பு
வளநாடு அருகே சாலையோரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியது. இதில் மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வளநாடு அருகே சாலையோரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியது. இதில் மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கார் மோதியது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து மதுரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த கைகாட்டி அருகே உள்ள காரணிக்குளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த பகுதியில் மழைபெய்தது. சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனிடையே அப்பகுதியை சேர்ந்த 3 பேர் மோட்டார் சைக்கிள்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு மழைக்காக அங்குள்ள நிழற்குடையில் ஒதுங்கி நின்று இருந்தனர். இதனிடையே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் சாலையோரத்தில் நின்றவர்கள், காரில் இருந்தவர்கள் என 6 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
மின்சார ஸ்கூட்டரில் தீ
இதற்கிடையே கார் மோதியதில் மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். கார் மோதிய வேகத்தில் ஸ்கூட்டர் சிறிதுதூரம் தள்ளி விழுந்து எரிந்ததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு இன்றி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற விபத்தை தடுக்க சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.