மினிலாரி மீது கார் மோதல்; 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மினிலாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 60). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சரவணன் (50), மகாலிங்கம் (56) ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு காரில் சென்றார். காரை விருதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் (56) என்பவர் ஓட்டினார்.
சென்னையில் வேலை முடிந்ததும், அவர்கள் நேற்று அதிகாலை மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அங்கு சாலையோரத்தில் தர்பூசணி லோடுடன் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் வந்த விவேகானந்தன், டிரைவர் கார்த்திகேயன் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சரவணன், மகாலிங்கம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணன், மகாலிங்கம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய 2 வாகனங்களையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.