மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; ஒருவர் பலி
நமணசமுத்திரம் போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார்.
திருச்சி பாரதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (வயது 52). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் மதுரை செல்வபுரம் பகுதியை சேர்ந்த பாலகுரு (23) என்பவருடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலையில் புதுக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நமணசமுத்திரம் போலீஸ் நிலையம் அருகே சென்ற போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜேந்திர பிரசாத், பாலகுரு ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திர பிரசாத் பரிதாபமாக இறந்தார். பாலகுருவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கோபால் மீது நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.