லாரி மீது கார் மோதல்; 2 நண்பர்கள் பலி
ராமநத்தம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பலியானார்கள்.
ராமநத்தம்,
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் கார்த்திக்(வயது 32). திருவள்ளூரை சேர்ந்தவர்கள் செந்தில்குமார்(35), சண்முகம் (27). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இதில் கார்த்திக், சண்முகம் ஆகிய 2 பேரும் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பெயிண்ட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தனர். செந்தில்குமார் கோவையில் உள்ள ஒரு பெயிண்ட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டம் சின்னாற்றில் நடந்த மற்றொரு நண்பர் ஒருவரின் திருமண விழாவுக்கு காரில் சென்றனர். அங்கு திருமணம் முடிந்ததும் நேற்று அதிகாலையில் அதே காரில் 3 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர். காரை செந்தில்குமார் ஓட்டினார்.
2 பேர் பலி
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள வெங்கானூரில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தில் இருந்து நாட்டுச்சர்க்கரை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற லாரியின் பின்பகுதியில் செந்தில்குமார் ஓட்டிச்சென்ற கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் சண்முகம், கார்த்திக் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். செந்தில்குமார் படுகாயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான 2 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.