மொபட் மீது கார் மோதல்; தொழிலாளி சாவு
மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால்(வயது 60). இளநீர் வியாபாரி. இவர் நேற்றுமுன்தினம் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு எதிரே மொபட்டில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார், கோபாலின் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோபால் படுகாயமடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள், கோபால் இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றி தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில், காரில் வந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த செல்வி(43) என்பதும், இங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் தனது மகனை பார்க்க காரில் வந்ததும் தெரியவந்தது. மேலும் காரை சிவகாசியை சேர்ந்த சங்கர்(33) என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இந்த விபத்தில் லேசான காயமடைந்த செல்வி சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.