மரத்தில் கார் மோதி பெண் பலி
மணல்மேடு அருகே கணவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது மரத்தில் கார் மோதி பெண் பலியானார். இந்த பரிதாப சம்பவம் குறித்து விவரம் வருமாறு:-
மணல்மேடு:
மணல்மேடு அருகே கணவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது மரத்தில் கார் மோதி பெண் பலியானார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து விவரம் வருமாறு:-
மரத்தில் கார் மோதியது
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவருடைய மனைவி பாமாவதி (வயது 52). இவர்களது மகன் கணேசன். சம்பவத்தன்று தமிழ்வாணனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக கணேசனும், பாமாவதியும் காரில் அழைத்து சென்றனர்.
காரை தலைஞாயிறு கீழவீதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுதன் ஓட்டி சென்றார். பட்டவர்த்தி- வில்லியநல்லூர் சாலையில் நடராஜபுரம் அய்யனார் கோவில் அருகே சென்றபோது சாலையோரம் இருந்த புளியமரத்தில் கார் மோதியது.
பெண் பலி
இதில் படுகாயம் அடைந்த பாமாவதி, கணேசனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாமாவதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
படுகாயம் அடைந்த கணேசன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார், டிரைவர் சுதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.