சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா தேரோட்டம்


சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா தேரோட்டம்
x

கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாசிமக திருவிழா

ஆண்டுதோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தையொட்டி கும்பகோணத்தில் மாசிமக திருவிழா விமரிசையாக நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசிமகத்தன்று மகாமக திருவிழாவாக கொண்டாடப்படும். மாசிமக திருவிழா கும்பகோணத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற சிவன், பெருமாள் கோவில்களில் ஒரே நேரத்தில் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

அதன்படி இந்த ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் ேகாவில், கவுதமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதி மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் (26-ந் தேதி) பெருமாள் கோவில்களில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்டம்

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று ஆதிகும்பேஸ்வரர் கோவில் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. அதேபோல காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய கோவில்களின் தேரோட்டமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

சக்கரபாணி கோவில் தேரோட்டம்

மாசி மக திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற வைணவ கோவிலான சக்கரபாணி சாமி கோவிலில் இன்று (திங்கட்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. இதற்காக நான்கு வீதிகளிலும் சாலைகளை சரி செய்யும் பணி நேற்று இரவு வரை நடைபெற்றது.

மின்வாரியத்தின் சார்பில் 4 வீதிகளிலும் மின் இணைப்புகள் இன்று காலை துண்டிக்கப்பட்டு தேர் சென்ற பின்பு உடனடியாக இணைப்பு கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story