தர்மபுரியில் சென்னகேசவ பெருமாள் கோவில் ராம நவமி திருவிழா தேரோட்டம்
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் சென்னகேசவ பெருமாள் கோவில் ராம நவமி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
ராம நவமி
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் ராம நவமி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் தினமும் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை நடந்தது.
தொடர்ந்து சாமிக்கு நவமி அபிஷேகமும், ராமர் அவதார அலங்கார சேவையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை அழைப்பும், பின்னர் கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நாளான நேற்று சென்னகேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தன. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லக்கு உற்சவமும், நாளை (திங்கட்கிழமை) சயன உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர், ராம நவமி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.