திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் தேரோட்டம்


திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் தேரோட்டம்
x

திருவாரூர் அருகே திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் தேரோட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர் அருகே திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் தேரோட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தியாகராஜர் கோவில்

திருவாரூர் அருகே உள்ள திருக்காரவாசலில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருக்காரவாசல் ஆதிவிடங்க தியாகராஜர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு மகா அபிஷேகம், பூத, யானை, ரிஷப வாகன வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

5 ஆண்டுகளுக்கு பிறகு...

இந்தநிலையில் நேற்று கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட தேரில் தியாகராஜர் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது.திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரூரா, தியாகேசா என பக்தி முழக்கங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.தேர் 4 வீதிகளில் வலம் வந்து நிலையடியை வந்தடைந்தது. இந்த தேருடன் அம்பாள் எழுந்தருளிய தேரும் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது.

விழாக்கோலம் பூண்ட நகரம்

தேரோட்டத்தையொட்டி திருக்காரவாசல் கிராமம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மணவழகன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், கோவில் செயல் அலுவலர் சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story