கார் கவிழ்ந்து விபத்து: தனியார் டி.வி. கேமராமேன் பலி


கார் கவிழ்ந்து விபத்து: தனியார் டி.வி. கேமராமேன் பலி
x

நெல்லை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் தனியார் டி.வி. கேமராமேன் பலியானார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நெல்லை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் தனியார் டி.வி. கேமராமேன் பலியானார்.

கேமராமேன்

நெல்லை அருகே ஆரைகுளத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மகன் சங்கர் (வயது 33). இவர் தனியார் டி.வி.யில் கேமராமேனாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலையில் நிலவில் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் பேட்டி வாங்குவதற்காக, சங்கர் தனது சக ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேருடன் காரில் சென்றார்.

பின்னர் நள்ளிரவில் அனைவரும் திருவனந்தபுரத்தில் இருந்து காரில் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சங்கர் காரை ஓட்டினார்.

கார் கவிழ்ந்து...

நேற்று அதிகாலையில் நெல்லை அருகே நாங்குநேரி மறுகால்குறிச்சி விலக்கு பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைடுமாறி நாற்கர சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் காரில் இருந்த சக ஊழியர்களான பாளையங்கோட்டை பெருமாள் கோவில் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த கந்தன் மகன் நாகராஜன் (32), நெல்லை அருகே கரையிருப்பைச் சேர்ந்த ராஜகோபால் மகன் நாராயணமூர்த்தி (31) மற்றும் சேரன்மாதேவியைச் சேர்ந்த வள்ளிநாயகம் (32) ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

3 பேருக்கு தீவிர சிகிச்சை

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இறந்த சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சங்கருக்கு பூர்வீக ஊர், நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ஆகும்.

முதல்-அமைச்சர் நிவாரண நிதி

இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது நிவாரண நிதியில் இருந்து, விபத்தில் இறந்த தனியார் டி.வி. கேமராமேன் சங்கரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்த 3 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து நெல்லை உதவி கலெக்டர் கார்த்திகாயினி நேற்று ஆரைகுளத்தில் உள்ள சங்கரின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.5 லட்சத்துக்கான காசோலைைய வழங்கினார். தொடர்ந்து படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறி, தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.


Next Story