20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; முதியவர் பலி

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் முதியவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் முதியவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளத்தில் கவிழ்ந்தது
கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 65). மாற்றுத்திறனாளியான இவர் தையல் கடை வைத்து நடத்தி வந்தார். அவர் கடந்த 17-ந் தேதி தனது மகன் ஜோபேஸ் (35), ஜோபேசின் மகள் அனாமிகா (9), உறவினர்கள் தாமஸ் (68), ஜார்ஜ் செபாஸ்டின் (59) ஆகிய 4 பேருடன் காரில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றார். காரை ஜோபேஸ் ஓட்டினார். அவர்கள் வேளாங்கண்ணியை சுற்றி பார்த்து விட்டு மேட்டுப்பாளையம், ஊட்டி வழியாக வயநாடுக்கு புறப்பட்டனர்.
இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை பர்லியாறு 3-வது கொண்டை ஊசி வளைவில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதியவர் பலி
விபத்தில் ஜோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஜோபேஸ், அனாமிகா, தாமஸ், ஜார்ஜ் செபாஸ்டின் ஆகிய 4 பேரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ஜோபேஸ், அனாமிகா, தாமஸ் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்த காரை மீட்டனர். பள்ளத்தில் விழுந்த கார் சேதமடைந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.