100 அடி ஆழ கிணற்றுக்குள் கார் பாய்ந்து கோர விபத்து: கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
100 அடி ஆழ கிணற்றுக்குள் கார் பாய்ந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
கோவை,
கோவை வடவள்ளி, நவாவூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்பாபு. இவரது மகன் ஆதர்ஸ் (வயது 18). என்ஜினீயரிங் மாணவர். இவரும், அவரது கல்லூரி நண்பர்களான வடவள்ளி எஸ்.வி நகரைச் சேர்ந்த ரோஷன் (18), ரவி கிருஷ்ணன் (18), நந்தனன் (18) ஆகியோரும் பூலுவப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ரிசார்ட்டிற்கு (தங்கும் விடுதி) நேற்று முன்தினம் சென்றனர்.
நண்பர்கள் அனைவரும் அந்த ரிசார்ட்டில் ஓணம் பண்டிகையை நேற்று முன்தினம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடினர். அன்று இரவு அங்கேயே தங்கினர். இதனைத்தொடர்ந்து, நேற்று கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் 4 பேரும் ஒரே காரில் வடவள்ளிக்கு நேற்று அதிகாலை புறப்பட்டனர். காரை ரோஷன் ஓட்டினார்.
கிணற்றுக்குள் பாய்ந்தது
கார் காலை 5.45 மணிக்கு தென்னமநல்லூர், கரியகாளியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள சாலையின் வளைவில் காரை ரோஷன் திருப்ப முயன்றார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தோட்டத்து இரும்பு கேட் கதவை உடைத்துக்கொண்டு அங்கிருந்த 100 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது. அந்த கிணற்றில் 70 அடிக்கும் மேல் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்த நிலையில் கார் கிணற்றுக்குள் விழுந்ததும் அதிர்ச்சி அடைந்த ரோஷன் கார் கதவை திறந்து வெளியே வந்து தண்ணீரில் மிதந்தபடி தத்தளித்து கொண்டிருந்தார்.
3 மாணவர்கள் பலி
ஆனால் மற்ற 3 பேரால் காருக்குள் இருந்து வெளியே வர முடியவில்லை. இதன்காரணமாக ஆதர்ஷ், ரவி, நந்தனன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளே மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே கார் இரும்பு கேட்டில் மோதிய சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த ரோஷனை மீட்டனர்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர்.
இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிர் தப்பிய ரோஷனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.