கல்பாக்கம் அருகே கார்-ஷேர்ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; 2 பேர் சாவு
கல்பாக்கம் அருகே கார்-ஷேர்ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த ஷேர் ஆட்டோ ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில், ஷேர் ஆட்டோவின் முன்பக்கம் பலத்த சேதம் ஏற்பட்டு சாலையில் கவிழ்ந்தது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணித்த 9 நபர்களில் அணைக்கட்டு செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் (வயது 60), பொம்மராஜபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பட்டம்மாள் (60) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
4 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து உடனடியாக தகவல் அறிந்து கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஷேர் ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தால் சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.