திருப்பரங்குன்றம் அருகே கார்-வேன் மோதி விபத்து;பெண் உள்பட 2 பேர் பலி
திருப்பரங்குன்றம் அருகே கார், வேன் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே கார், வேன் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
காரில் பயணம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 40). செங்கோட்டை பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மனைவி ஜெயஸ்ரீ (50). இவர்கள் தென்காசியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் கோவையில் ஆன்லைன் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் கலந்துகொள்ள சண்முகராஜா, ஜெயஸ்ரீ மற்றும் அவர்களது கம்பெனியில் வேலை பார்த்து வந்த சுவைதீர்த்தபுரத்தை சேர்ந்த செந்தில் இசக்கி(28), வீரகேரளம்புதூரை சேர்ந்த கிருஷ்ணன்(38) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் கோவையில் இருந்து கடையநல்லூருக்கு ஒரு காரில் புறப்பட்டனர். காரை கடையநல்லூரை சேர்ந்த டிரைவர் வைரமுத்து(29) ஓட்டி வந்தார்.
கார்-வேன் மோதல்
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம்-கீழக்குயில்குடி சந்திப்பு மொட்டமலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த கார் வந்தது.
அப்போது, ஒரு சரக்கு வேன் பின்னால் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த காரும், சரக்கு வேனும் ஒன்றுக்குப்பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இதில் கார் நொறுங்கியது.
2 பேர் பலி
காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த சண்முகராஜா, ஜெயஸ்ரீ ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் கார் டிரைவர் வைரமுத்து, காரில் வந்த செந்தில் இசக்கி, கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதே போல் வேன் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரும் லேசான காயத்துடன் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான சண்முகராஜா, ஜெயஸ்ரீ ஆகியோர் உடல்களை பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.