ஏலக்காய் விலை கிடுகிடு உயர்வு


ஏலக்காய் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 1 Aug 2023 1:00 AM IST (Updated: 1 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

போடியில் ஏலக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ ஏலக்காய் ரூ.2,300-க்கு விற்பனை ஆனது.

தேனி

ஏலக்காய் விலை உயர்வு

தேனி மாவட்டம் போடியில், குரங்கணி சாலையில் ஏலக்காய் நறுமண பொருட்கள் விற்பனை வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய்கள், இந்த வாரியத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆன்லைன் ஏல அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் நடப்பாண்டில் விளைந்த ஏலக்காய்களை விற்பனைக்காக போடி ஏலக்காய் நறுமண வாரியத்தில் விவசாயிகள், வியாபாரிகள் பதிவு செய்தனர். அதன்படி, நேற்று ஒரே நாளில் 75 டன் ஏலக்காய்கள் விற்பனைக்கு வந்தன. பின்னர் ஆன்லைன் மூலம் ஏலக்காய் விற்பனை ஏலம் நடைபெற்றது. இதில், முதல்தர ஏலக்காய் கிலோ ரூ.2,300-க்கு விற்பனையானது. சராசரி ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1,600-க்கும் விற்பனையானது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்தர ஏலக்காய் கிலோ ரூ.1,600-க்கும், சராசரி ஏலக்காய் ரூ.1,100-க்கும் விற்றது. ஆனால் தற்போது அவற்றின் விலை முறையே ரூ.700, ரூ.500 என விலை உயர்ந்துள்ளது.

விளைச்சல் குறைவு

ஏலக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்தது குறித்து ஏலக்காய் விவசாயியும், வியாபாரியுமான ஞானவேல் என்பவர் கூறுகையில், "இந்த ஆண்டு ஏலக்காய் அதிகம் விளையும் கேரள மாநில பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஏலக்காய் செடிகளில் காய்க்கவில்லை. அதேபோல் அதிக மழை பெய்த சில இடங்களில் ஏலக்காய் செடிகளில் அழுகல் நோய் ஏற்பட்டது. இதுதவிர கேரளாவில் அதிக காற்று வீசுவதால், ஏலக்காய் செடிகள் ஒன்றோடு ஒன்று உரசி ஏலக்காய்களும், பிஞ்சுகளும் உதிர்ந்து வருகிறது. இதனால் ஏலக்காய் விளைச்சல் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் எதிர்கால லாபத்தை கணக்கிட்டு கூடுதல் விலைக்கு ஏலக்காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து இருப்பு வைத்து வருகிறார்கள். இன்னும் வடமாநில ஏலக்காய் வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கவில்லை. கிடைத்ததும் இங்கு வந்து அதிக அளவில் ஏலக்காய்களை கொள்முதல் செய்வார்கள். அப்போது ஏலக்காய் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது" என்றார்.


Related Tags :
Next Story