தென்னிலை அருகே லாரி மோதி சரக்கு வேன் டிரைவர் பலி
தென்னிலை அருகே லாரி மோதி சரக்கு வேன் டிரைவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
லாரி மோதல்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தாங்கல் கக்கன் காலனி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 23). இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருடன் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், விளாங்காட்டூர் பகுதியை சேர்ந்த சாம்பன் (31) என்பவரும் பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் ஒரு சரக்கு வேனில் கூரியர் பார்சல்களை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.நேற்று முன்தினம் அதிகாலை தென்னிலை காட்டு முன்னூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது பிரிவு சாலையில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வெளியே வந்த லாரி, சரக்கு வேன் மீது மோதியது.
டிரைவர் பலி
இதில் பலத்த காயமடைந்த மோகன், சாம்பன் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மோகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சாம்பனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தென்னிலை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி ஆகியோர் வழக்கு பதிந்து, லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் லந்தக்கோட்டை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.