கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்


கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
x

டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது, பாராட்டுக்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

கர்நாடக இசையை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்ற அற்புதமான கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சென்னை சங்கீத அகாடமி, சங்கீத கலாநிதி விருது (2024) வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது, பாராட்டுக்குரியது. டி.எம்.கிருஷ்ணாவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறது.

சாதிய, வகுப்புவாத பாகுபாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவரது குரல் மற்றும் எழுத்து ஓங்கி ஒலித்து வந்திருக்கிறது. கர்நாடக இசை துறையில் பிராமணிய ஆதிக்கம் மேலோங்கி இருப்பதை அவர் கண்டிக்கத் தவறியதே இல்லை. அனைவருக்குமான இசையாக குறிப்பாக அடித்தட்டு மக்களை சென்றடையும் இசையாக அதை மாற்றுவதற்குத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் "மீ டூ" இயக்கம் முன்னுக்கு வந்த போது, சில இசை கலைஞர்களின் பாலியல் தவறுகளை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் அவர் நின்றிருக்கிறார். இத்தகைய அவரது சமூக நிலைபாடுகள் சங்பரிவாரம் மற்றும் வேறு சிலர் மத்தியில் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சங்பரிவாரத்தின் ஏராளமான அச்சுறுத்தல்களை அவர் கடந்த காலத்தில் எதிர் கொண்டுள்ளார்.

தற்போது டி.எம். கிருஷ்ணாவின் தலைமையில் நடக்க உள்ள சென்னை சங்கீத அகாடமியின் வருடாந்திர மாநாட்டைப் புறக்கணிப்பதாக சில கலைஞர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். கர்நாடக சங்கீத உலகத்தையே அவர் கேவலப்படுத்தி விட்டதாகவும், பெரியாரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதாகவும் காரணங்களைக் கூறி பல அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அகாடமி அதற்கு இரையாகாமல், எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பதில் கூறியிருப்பது பாராட்டத்தக்கது.

எதிர் நிலை கருத்துக்களை, விமர்சனங்களை அடக்கி ஒடுக்குவதையே வாடிக்கையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. ஆட்சியில் இதுபோன்ற தாக்குதல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. உயர்சாதிய, ஆணாதிக்க மனுவாத சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

டி.எம்.கிருஷ்ணா உறுதியோடும் துணிச்சலோடும் இதனை நிச்சயம் எதிர்கொள்வார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அவரோடு துணை நிற்கும். ஜனநாயக சக்திகள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story