வரத்து குறைவால்தர்மபுரி உழவர் சந்தையில் கேரட் விலை உயர்வுகிலோ ரூ.75-க்கு விற்பனை


வரத்து குறைவால்தர்மபுரி உழவர் சந்தையில் கேரட் விலை உயர்வுகிலோ ரூ.75-க்கு விற்பனை
x
தினத்தந்தி 20 July 2023 7:00 PM GMT (Updated: 20 July 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து குறைந்ததால் கேரட் விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.9 அதிகரித்து கிலோ ரூ.75-க்கு விற்பனையானது.

கேரட்

முக்கிய காய்கறி வகைகளில் ஒன்றான கேரட் சத்தான உணவு பொருட்களில் ஒன்றாக பெரும்பாலானவர்களால் விரும்பப்படுகிறது. குறிப்பாக சிறுவர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிடுவார்கள். மலைப்பகுதிகள் மற்றும் சமவெளி பகுதிகளில் கேரட் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட கேரட் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டிய காய்கறி வகைகளில் ஒன்றாக இருக்கிறது.

குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை கொண்ட பகுதிகளில் விளையும் கேரட் உற்பத்தி வெயிலின் தாக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக குறைந்தது. இதனால் கேரட் விலை வழக்கத்தை விட அதிகரித்தது. கடந்த வாரத்தில் சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் கேரட் விலை சற்று குறைந்தது. உழவர் சந்தைகளில் 1 கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

ரூ.9 அதிகரிப்பு

இந்த நிலையில் கேரட் வரத்து மீண்டும் குறைந்ததால் அதன் தேவை அதிகரித்தது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ ரூ.66-க்கு விற்பனையான கேரட் நேற்று ஒரே நாளில் 1 கிலோவிற்கு ரூ.9 அதிகரித்தது.

தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ கேரட் ரூ.75-க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.85 முதல் ரூ.90 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. கேரட்டுக்கான தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story