கார்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் சாவு


கார்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் சாவு
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூர்

வேப்பூர்,

ஆம்புலன்ஸ் டிரைவர்

குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் தங்கவேல் (வயது 39). இவருடைய மனைவி சாரதா(30). இவர்களுக்கு சாய் தர்ஷன் (9) என்ற மகனும், ஆத்விகா (6) என்ற மகளும் உள்ளனர்.

தங்கவேல் திருப்பூரில் தங்கி, தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணி செய்து வந்தார்.

இந்த நிலையில், குடும்ப நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான குறிஞ்சிப்பாடிக்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு, ஒரு காரில் திருப்பூருக்கு அனைவரும் புறப்பட்டனர். காரை தங்கவேல் ஓட்டினார்.

2 பேர் சாவு

அப்போது, விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த ஏ.சித்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிரே பெரம்பலூரில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு காரும், தங்கவேல் ஓட்டிச்சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கவேல் இறந்தார்.

மேலும் அவரது மனைவி சாரதா, மகள் ஆத்விகா, மகன் தர்ஷன் மற்றும் எதிரே வந்த காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பெரம்பலூர் மாவட்டம் பொம்மணப்பாடி நல்லு மகன் அண்ணாமலை (76) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 7 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போலீஸ் விசாரணை

விபத்து பற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து காரணமாக, விருத்தாசலம்-சேலம் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story