பிரபல நிறுவனத்தின் பெயரில்போலி டீசல், ஆயில் விற்ற 5 கடை உரிமையாளர்கள் மீது வழக்குதொப்பூர் போலீசார் விசாரணை
பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீசல், ஆயில் விற்ற 5 கடை உரிமையாளர்கள் மீது தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலி ஆயில் விற்பனை
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் சேலம்- தர்மபுரி சாலையில் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் டிரேடர்ஸ் கடைகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களுக்கு தேவையான ஆயில் மற்றும் உதிரிபாகங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
இங்குள்ள கடைகளில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்தின் சென்னை அலுவலக மேலாளர் சதீஷ்குமார் (வயது 38) மற்றும் குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 5 கடைகளில் வாகனங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீசல், எக்ஸாஸ்ட் ஆயிலை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு
போலி டீசல், எக்ஸாஸ்ட் ஆயிலை விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றியதாகவும், அதன் மூலம் வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் சம்பந்தப்பட்ட 5 கடைகள் மீது தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து காப்பிரைட் சட்டம் 1957-விதிகளின்படி சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் சதீஷ்குமார் (32), ராஜா (42), மனோஜ் (27), பாலகிருஷ்ணன் (30), ராஜமாணிக்கம் (73) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.