சூதாடிய 13 பேர் மீது வழக்கு
மோகனூரில் சூதாடிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் அவர்களிடமிருந்து ரூ.17,500, 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.
மோகனூர்
மோகனூர் காவிரி ஆற்றங்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்போது ரெயில்வே மேம்பாலம் அருகே காவிரி ஆற்று பகுதியில் சூதாடி கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். விசாரணையில் மோகனூர் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (வயது48), மணிமாறன் (46), ஜெயபால் (38), விவேகானந்தன் (34), சிவகுமார் (43), கார்த்தி, பார்த்திபன் (32), வினோத் (23) ஆகிய 8 பேரை கைது செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய கிஷோர், தேவராஜ், அரவிந்த், சேகர், ராகுல் ஆகிய 5 பேர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து ரூ.17,500 பணத்தையும், 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்யப்பட்டன.