போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தவர் தீக்குளித்ததால் பரபரப்பு
உசிலம்பட்டியில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெயிண்டர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருக்கட்டான்பட்டியை சேர்ந்தவர், கோட்டைச்சாமி (வயது45). பெயிண்டர்.
இவருடைய மனைவி காமாட்சி. இவர் தனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று பகலில் கோட்டைச்சாமி பக்கத்து வீட்டைச் சேர்ந்த தங்கராமன் (23) என்பவருடன் தகராறு செய்தார். இதில் தாக்கப்பட்டதில் தங்கராமனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவரும் உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுதொடர்பான விசாரணைக்கு கோட்டைச்சாமி, போலீஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். அவரிடம் சற்று நேரத்தில் விசாரிப்பதாக போலீசார் கூறி உள்ளனர்.
தீக்குளிப்பு
இதைத்தொடர்ந்து வெளியே வந்த அவர், பெயிண்டில் கலக்கும் 'தின்னர்' திரவத்தை உடலில் ஊற்றி திடீரென தீ வைத்துக்கொண்டார். போலீஸ் நிலையம் முன்பாக நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே தீயை அணைத்து கோட்டைச்சாமியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளித்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.