கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க 1000 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம்


கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க 1000 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம்
x

தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனை, கடத்தலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000 பேரிடம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டு உள்ளது.

மதுரை


தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனை, கடத்தலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000 பேரிடம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டு உள்ளது.

கஞ்சா விற்பனை

தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர், கைது செய்யப் படுவதுடன் அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 3 மாதங்களில் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட 8 வழக்குகளில், அதில் தொடர்புடைய குற்றவாளிகளின் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களான 31 வீடுகள், 19 நிலங்கள் மற்றும் 5 கடைகள், 8 வாகனங்கள் மற்றும் 18 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் சொத்துக்கள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்களின் வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப் படுகிறது. அதன்படி, தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் சுமார் 831 வழக்குகளில் 1450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

பிணைய பத்திரம்

மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, நன்னடைத்தைக்கான பிணைய பத்திரமும் பெறப்பட்டு உள்ளது. பொதுவாக நன்னடத்தைக்கான பிணைய பத்திரமானது, ரவுடி மற்றும் சந்தேக குற்றவாளிகள் மீது பெறப்படும்.

தற்போது இந்த சட்டம் கஞ்சா குற்றவாளி களுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் தென் மாவட்டங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுவந்த குற்றவாளிகளை கண்டறிந்து, 1000 நபர்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செயல்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டு உள்ளது.

அதில், மதுரை-142, விருதுநகர்-81, திண்டுக்கல்-186, தேனி-271, ராமநாதபுரம்-87, சிவகங்கை-30, நெல்லை -43, தென்காசி-32, தூத்துக்குடி-104, கன்னியாகுமரி -24 அடக்குவர். பிணையப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் பிணையப்பத்திர விதிமுறைகளை மீறப்பட்டதாக கருதி அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நடவடிக்கை

தென்மண்டலத்தில் உள்ள 4 டி.ஐ.ஜி.க்கள், 10 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் முற்றிலுமாக ஒழிக்க தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story